ஸ்ரீஹரிகோட்டா, ஜன.1 - புத்தாண்டு தினமான திங்க ளன்று (ஜனவரி 1) இஸ்ரோவின் ‘எக்ஸ்போ சாட்’ செயற்கைகோள், ‘பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்’ மூலம் காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாக புரிந்து கொள்வதற்காக ‘எக்ஸ்போ சாட்’ எனும் அதிநவீன செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது. எக்ஸ்போசெட் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இது பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இதற்காக எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ கிராபி), போலிக் (எக்ஸ்ரே போலாரி மீட்டர்) ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கருந்துளைகள், நியூட்ரான் பற்றி ஆராய பிரத்யேக செயற்கைக்கோளை கொண்டி ருக்கும் 2-வது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது
. ‘எக்ஸ்போ சாட்’-டால் எக்ஸ் கதிர் மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய முடியும் என்பதால், இந்த தரவுகள், பிரபஞ்சத்தின் செயல்பாடு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். காலநிலை பற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்த புரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்’ என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.